திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்றும் அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்.
திருச்சி: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை 2வது தலைநகராக்கும் அல்லது துணை தலைநகராக மாற்றும் அறிவிப்பு இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30, 2026-ல் தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4, 2026-ல் நடைபெற்று முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோடை வெயிலை விட அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.
தேர்தல் அறிக்கை
ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் வெற்றிப் பெற்றால் என்ன செய்வோம் என்பது குறித்து தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். அதிமுக தங்கள் தேர்தல் முதல் கட்ட தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், குடும்பத்திற்கு கருணை தொகையாக ரூ.10 ஆயிரம், ரேஷன் கார்டு தாரர்களுக்கு பிரிட்ஜ் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் தவெகவும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆனால் மக்கள் அதிகம் திமுகவின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் உறுதிமொழிகள் பிரமாண்டமாக இருக்கும் என்று தெரிய வருகிறது. முக்கியமாக நகை கடன் தள்ளுபடி, எல்இடி டிவி, வாஷிங்மெஷின் போன்ற அறிவிப்புகளுடன் பிரமாண்ட அறிவிப்பு ஒன்றும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பிரமாண்ட அறிவிப்பு திருச்சியை தமிழ்நாட்டின் 2வது தலைநகர் அல்லது துணை தலைநகராக்கும் அறிவிப்பு என்கின்றனர் விபரமறிந்த வட்டாரங்கள்.
தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம்
தமிழ்நாட்டின் புவிபரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் மாநிலத்தின் மைய பகுதியாக திருச்சி உள்ளது. திருச்சியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் கனவு திட்டமாக இருந்தது. இருப்பினும், பல்வேறு சமூக அரசியல் காரணங்களால் அத்திட்டத்தை அவர் செயல்படுத்தவில்லை. தற்போது, அந்த கோரிக்கை மீண்டும் அரசியல் களத்தில் இருந்து எழத்தொடங்கியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக வாக்குறுதியில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டுமென திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்போது இருந்தே திமுக தேர்தல் அறிக்கையில் திருச்சி 2வது தலைநகராக்கும் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. பொருளாதார வளர்ச்சிக்கும், வளர்ச்சி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும் அதிகார பரவலாக்கம் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய தலைநகரமான சென்னை அரசின் ஒட்டுமொத்த அரசு அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. அதிகாரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெகுதூரத்தில் வாழும் மக்கள் சொற்ப அளவிலே மக்களாட்சியின் பயன்களை அனுபவித்து வருகின்றனர்.
நிதி நிலைமை, உள்கட்டமைப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பரப்பளவு அடிப்படையிலான சென்ட்ராய்டு மத்திய இந்தியப் பகுதியில், மத்தியப் பிரதேசத்தை ஒட்டிய இடங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பழைய தலைநகரம் கொல்கத்தா கிழக்கில் இருந்த நிலையில், 1911-ல் நிர்வாக வசதி மற்றும் புவியியல் காரணங்களால் தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் சீரான குடிமைப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் கொண்டு செல்ல இந்த மாற்றம் பயன்பட்டது.
சென்ட்ராய்டு (Centroid) என்பது குறிப்பிட்ட ஒரு பகுதியின் புவியியல் எல்லைகளை கணித ரீதியாக கணக்கிட்டு அதன் சராசரி மையப்பகுதியை கண்டறியும் அறிவியல் கருத்தாகும். ஒரு வரைபடத்தை சமநிலையாக வைத்தால் அது நிலையாக இருக்கும் புள்ளியே சென்ட்ராய்டு என எளிதாக விளக்கலாம்.
தமிழகத்தில் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்ட சென்ட்ராய்டு திருச்சி மாவட்டத்தைச் சுற்றி, குறிப்பாக குளித்தலைக்கு அருகே இருப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வடக்கு–தெற்கு மாவட்டங்களுக்கு இடையே சமநிலையான இடத்தில் இருப்பதால் திருச்சி மாநிலத்தின் புவியியல் மையமாக பார்க்கப்படுகிறது மேலும் திருச்சியின் வளர்ச்சி தற்போது அபாராமாக உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து முனையம், டைடல் பார்க், சுற்றுச்சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி போன்றவற்றில் தன்னிகராக மாறியுள்ளது.
சென்னை தமிழகத்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. நிர்வாகம் மற்றும் வளர்ச்சி அதிகமாக அங்கு குவிந்துள்ளதால், மையப்பகுதிகளுக்கும் தெற்கு மாவட்டங்களுக்கும் சமமான வளர்ச்சி தேவை என்ற விவாதம் தொடர்ந்து எழுகிறது. திருச்சியில் விமான நிலையம், ரயில்வே சந்திப்பு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவை ஏற்கனவே உள்ளதால், அவற்றை மேம்படுத்தி மாநில அளவிலான இணைப்புகளை வலுப்படுத்த முடியும். சென்னை மீது இருக்கும் அழுத்தம் குறையும் கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் , சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் சமநிலையான வளர்ச்சி உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதன் காரணமாக, தென்மாவட்டங்கள் தங்களது முக்கியத்துவத்தை மீண்டும் பெறக்கூடும்.
அதனால் திமுக தங்களின் பிரமாண்ட அறிவிப்பாக திருச்சியை மாநிலத்தில் 2வது தலைராக்கும் திட்டம் குறித்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது.