Tiruvannamalai Deepam 2026: திருவண்ணாமலை மலை உச்சியில், மழை, கடும் பனிக்கு இடையே மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷத்துடன் பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை, பக்தி முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீப திருவிழா-விண்ணை முட்டிய அரோகரா கோஷம்
கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே நம் இல்லங்கள் மட்டுமல்லாமல், நம்முடைய சுற்றமும் தீப ஒளியால் ஜொலிக்கும் திருக்கார்த்திகை தினம் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
நடப்பாண்டு திருக்கார்த்திகை நவம்பர் 24-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அறியப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் ஆண்டுதோறும் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதனைக் காண உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்
திருவண்ணாமலை கோயிலில் கடந்த 15-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடா துணிகள், 4 ஆயிரத்து 500 லிட்டர் நெய் 310 கிலோ எடை கொண்ட தீபக் கொப்பரை ஆகியவை பூஜை செய்யப்பட்டு நவம்பர் 23-ம் தேதி, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு பக்தர்களால் எடுத்து செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப திருவிழா நவம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்பட்ட தீபத்தை, அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன், அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
11 நாட்கள்.. 20 கி.மீ., தொலைவுக்கு தெரியும் தீபம்
ஆண்டாண்டு காலமாக பர்வத ராஜகுலத்தினரால் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை காண்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் அக்னி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுப்பார். திருவண்ணாமலை மகா தீபம் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.
முன்னதாக, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பரணி தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் நெய்யை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழங்கினார்.
மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் லட்சணக்கனக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.