இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கேமரா, டிஸ்பிளே போன்றே பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஆனாலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்கள் அதிக பேட்டரி விரைவாக குறையக்கூடாது என்று விரும்புகிறார்கள். எனவே இதனால் ஸ்மார்ட்போனில் பேட்டரி கொஞ்சம் குறைந்தாலும் கூட உடனே சார்ஜ் (charge) போடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் அப்படி அடிக்கடி ஸ்மார்ட்போனை சார்ஜ் போடுவது சரியா?
அதன்படி உங்களுடைய ஸ்மார்ட்போனின் பேட்டரி எப்போதும் சரியான ஆரோக்கியத்துடன் இருக்க 20%க்கு கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் 20 சதவீதம் சார்ஜில் இணைத்து 90 சதவீதம் வரை சார்ஜ் செய்வது பேட்டரியை நீண்ட காலம் பழுதாகாமல் பராமரிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் பேட்டரி 0%-ல் இருந்து சார்ஜ் செய்யும்போது உங்களது போன் சூடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எப்போதும் உங்களது ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகும் வரை பயன்படுத்தாதீர்கள்.
குறிப்பாக மொபைல்போனை நீங்கள் அதிக நேரம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், 50 முதல் 60 சதவீத சார்ஜில் வைத்திருக்கும்படி ஆப்பிள் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. காரணம் என்னவென்றால் இச்சமயத்தில் பேட்டரிக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தால், பேட்டரி வெப்பமாகி பழுதாவது தவிர்க்கப்படுகிறது.
அதேசமயம் மொபைல்போன் பேட்டரி சேதமாவதைத் தவிர்க்க எப்போதுமே குளிர்ந்த இடத்தில் வையுங்கள். அதற்கு வேண்டி ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்க வேண்டாம். அதாவது அறை வெப்பநிலையிலேயே வெயில் அதிகம் படாத இடத்தில் செல்போனை வைப்பது பேட்டரி மற்றும் போனுக்கும் பாதுகாப்பானது.மொபைல் போனுக்கு எப்போதுமே நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இதை மீறி மலிவாக சார்ஜர்கள் கிடைக்கிறது என்று ஏதோ ஒரு நிறுவனத்தின் சார்ஜரை பயன்படுத்துவது தவறு. அது உங்களுடைய மொபைல் போனுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.
அதேபோல் உங்கள் போன் சார்ஜில் இருக்கும்போது வைஃபை, ஜிபிஎஸ், புளுடூத் ஆகியவற்றை ஆஃப் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மொபைல் போனில் ஏறும் சார்ஜை இவைகள் சாப்பிட்டுவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக போனுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்க வேண்டும், நாள் ஒன்றுக்கு செல்போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும், அவ்வப்போது ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷனை நிறுத்தி வைக்க வேண்டும்.
குறிப்பாக இப்போது அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் அதிவேக சார்ஜிங் வசதியுடன் தான் வருகின்றன. ஆனாலும் அவற்றைப் பயன்படுத்தும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சில நிறுவனங்கள் அதிவேக சார்ஜிங் வசதியுடன் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகின்றன. எனவே இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன்களை தேர்வு செய்வது நல்லது.