அதிமுக+ Vs தவெக: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது யாருக்கு அதிக பாதிப்பு?

65 0

ஒருவழியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது தேமுதிக. பிரேமலதா எடுத்த இந்த அதிரடி முடிவால், அதிமுக கூட்டணிக்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்ன? தவெகவின் மனநிலை என்ன?

2005-ல் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக தொடங்கப்பட்டது. விஜயகாந்த் கட்சி தொடங்க முக்கிய காரணம் திமுக கொடுத்த நெருக்கடிகள்தான் என்று பேசப்பட்டது. 2006-ல் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவில் விஜயகாந்த் மட்டும் ஒரே ஆளாக வென்றார். தொடர்ந்து அதிமுக மீதான விமர்சனங்களை குறைத்துக்கொண்டு, திமுகவை போட்டுத் தாக்க ஆரம்பித்தார் விஜயகாந்த். பின்னர் 2011-ல் அதிமுகவோடு கூட்டணி வைத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

அதன்பிறகு அதிமுகவோடும் மோதிய விஜயகாந்தின் தேமுதிக, படிப்படியாக கரைந்துப் போனது. 2016 தேர்தலில் ‘பழம் நழுவிப் பாலில் விழும்’ என தேமுதிக கூட்டணிக்காக காத்திருந்தார் கருணாநிதி. ஆனால், அந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கி படுதோல்வியடைந்தது தேமுதிக.

பின்னர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து வெறும் 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. 2011-க்கு பின்னர் ஒரு தேர்தலில் கூட தேமுதிகவால் வெல்ல முடியவில்லை.

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிவைத்த தேமுதிக, ராஜ்ய சபா சீட் கிடைக்காத விரக்தியில் அந்தக் கூட்டணியை விட்டு விலகியே நின்றது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, திமுக, என்டிஏ என இரு தரப்பிலும் தேமுதிக சார்பில் பேச்சு நடத்திய நிலையில், தவெக ஆப்ஷனும் அக்கட்சியிடம் இருந்தது. இந்தச் சூழலில்தான் தற்போது திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது தேமுதிக.

திமுகவுக்கு கிடைக்கப் போகும் அனுகூலம்!

தேமுதிகவின் வருகை நிச்சயமாக திமுக கூட்டணிக்கு பலம்தான். ஏனென்றால், ஏற்கெனவே வலுவான கூட்டணி இருந்தாலும், ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் தவெகவின் வருகையால் இழக்கப் போகும் வாக்குகளை ஈடு செய்ய புதிய கட்சிகள் தேவை என்று கணக்குப் போடுகிறது திமுக. இது மட்டுமின்றி கூட்டணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்புகளை தீர்க்கவும் புதிய கட்சிகள் திமுகவுக்கு தேவைப்படுகிறது.

சமீப காலமாகவே காங்கிரஸ் கட்சி, தவெக எனும் சின்ன மீனைப் போட்டு திமுக எனும் பெரிய மீனை மிரட்டி வருகிறது. ‘அதிகம் தொகுதிகள், ஆட்சியில் பங்கு, ராஜ்ய சபா, வாரியத் தலைவர் பதவிகள் வேண்டும்’ எனக் கேட்டு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். எவ்வளவு தூரம்தான் போவார்கள் என காங்கிரஸை ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக. அதனால்தான் சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலைகூட சந்திக்காமல் தவிர்த்தார் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக செய்யும் வியூகங்களை உடைக்க புதிய கட்சிகள் தேவை. எனவே, உங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க முடியாது என்று தெளிவான மெசேஜை தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவந்து காங்கிரஸுக்கு சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

காங்கிரஸ் மட்டுமல்ல விசிக, கம்யூனிஸ்டுகளும் இம்முறை கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கி வந்தனர். இருப்பவர்களுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுப்பதை விட, புதிதாக ஒரு கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு சில தொகுதிகளை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில்தான் முரசு கட்சிக்கு சூரியக் கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ளது.

ஒரு கல்லில் பல மாங்காய் என்பதுபோல தேமுதிகவை உள்ளே கொண்டுவந்து காங்கிரஸின் ‘கேட்கும் திறனை’ குறைத்துள்ளது திமுக. அதுபோலவே விசிக, கம்யூனிஸ்டுகள், மய்யம், மதிமுக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளின் ‘கூடுதல் தொகுதிகள்’ கோரிக்கைக்கும் ‘முடிவுரை’ எழுதியுள்ளது.

இதன் மூலமாக கடந்த முறை பெற்ற தொகுதிகளையே இம்முறையும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கொடுக்கும். புதிதாக வந்துள்ள மய்யத்துக்கு 3 முதல் 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 6 அல்லது 7 தொகுதிகளும் கொடுக்கப்படலாம். ராஜ்ய சபா சீட்டை பிரேமலதா உறுதி செய்துள்ளாரா என்பது விரைவில் தெரிய வரும்.

அதிமுகவுக்கு ஷாக்!

வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ள திமுக, எந்த எல்லைக்கும் சென்று வாய்ப்புள்ள கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்த்து வருகிறது. ஆனால், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளைக் கூட பழனிசாமியால் தக்கவைக்க முடியவில்லை. தொடக்கத்திலிருந்தே தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க பழனிசாமிக்கு மனது இல்லை.

மேலும், தேமுதிக தரப்பில் அதிமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் ராஜ்ய சபா சீட் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு கடைசிவரை பழனிசாமி பிடி கொடுக்கவே இல்லை.

10 சதவீதத்தில் இருந்து சுமார் 1 சதவீதம் அளவுக்கு தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துப் போயிருந்தாலும், தமிழகத்தில் 20 முதல் 30 தொகுதிகளில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அது நிச்சயமாக என்டிஏவுக்கு பலமாக மாறியிருக்கும். தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக எடுத்த பலகட்ட முயற்சிகளும் பலனளிக்காமல் போனது.

திமுக – தேமுதிக கூட்டணி, அதிமுகவுக்கு மட்டுமல்ல தவெகவுக்கும் நிச்சயம் ஷாக் தான். 234 தொகுதிகளுக்கும் ’பசையுள்ள’ வேட்பாளர்களை பிடிக்க திணறும் தவெக, கணிசமான தொகுதிகளை தள்ளிவிட கூட்டணிக் கட்சிகளை தேடி வருகிறது.

ஏற்கெனவே, தினகரன், அன்புமணி ஆகியோர் எஸ்கேப் ஆன நிலையில், எப்படியும் காங்கிரஸை கொண்டு வரலாம், கூடவே தேமுதிகவையும் கொண்டு வரலாம் என்று நினைத்தார் விஜய். ஆனால், விஜய்யின் ஆசையிலும் இடியை இறக்கிவிட்டது தேமுதிக. இனி காங்கிரஸும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு திமுகவில் இருக்கும் சூழலே உருவாகும்.

எனவே, தேமுதிகவின் இந்த முடிவால் தவெகவின் கூட்டணிக் கனவும் கிட்டத்திட்ட முடிந்துவிட்டது. அந்த விரக்தியில் தான் தேமுதிக – திமுக கூட்டணியை ‘விஜயகாந்த் மன்னிக்க மாட்டார்’ என புலம்பியுள்ளார் தவெக நிர்வாகி நிர்மல்குமார்.

மொத்தத்தில் திமுக கூட்டணிக்கு பூஸ்ட் கொடுத்து, அதிமுக கூட்டணிக்கு ‘பை பை’ சொல்லிவிட்டு, கூடவே தவெகவின் கனவுக்கும் ‘எண்ட் கார்டு’ போட்டு இந்த நேரத்தில் கேம் சேஞ்சராக மாறியுள்ளார் பிரேமலதா.

Related Post

வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

Posted by - August 20, 2025 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும்…

SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்

Posted by - December 11, 2025 0
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில்,…

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - September 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - February 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

Posted by - October 17, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *