பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு
திமுக கூட்டணி உறுதியான வலுவான கூட்டணி. சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளை கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவீதத்தோடு கைப்பற்றுவோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவிகிதத்தில் வெல்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எங்கள் இயக்கத்திற்கு அறிவு பரிசோதனை குறித்து பேசுபவர் முதலில் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.
வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் தேர்தல் பணிமனையை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
’’நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் , தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆலோசனைக்கூட்டங்கள் பாகமுகவர்கள் கூட்டம் என நடக்கிறது இன்று தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது வில்லிவாக்கத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக தேர்தல் பணியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளோம்.
அனைத்து முறையும் திமுகதான்
இங்கு திமுகவிற்கு சாதகமான தொகுதி, வில்லிவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் ஒரு முறையை தவிர அனைத்து முறையும் திமுகதான் வென்றுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், தேர்தல் பணி என அனைத்தையும் இங்கிருந்து தான் துவங்குகிறோம். வெற்றியினையும் இங்கிருந்து துவங்குவோம் என்று உறுதியோடு சொல்கிறோம்..
பலர் அதிகார ஆசையோடு, மமதையோடு எதை வேண்டுமானால், எதைக் கொடுத்தும் வாங்கி விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம். அனைவரையும் மதிக்கவேண்டும். இவர்களுக்கெல்லாம் தக்க பாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும்.
தன் தாயே தடுத்தாலும்
ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைகட்டிக்கொண்டு நின்றவர் இன்று எங்களுக்கு அறிவு பரிசோதனை செய்யவேண்டும் என்கிறார். முதலில் இவருக்குத்தான் கீழ்ப்பாக்கம் மனநல மையத்தில் பரிசோதனை செய்யவேண்டும். பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்.
அரசியல் ஞானம் பெற்றவர் திமுக தலைவர். திமுக கூட்டணி உறுதியான வலுவான கூட்டணி. சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளை கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவீதத்தோடு கைப்பற்றுவோம்.
பேய், பிசாசினை பார்த்து பயப்படமாட்டோம்
நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை. எங்களுடைய கொள்கை, கோட்பாடுகள், திட்டங்கள், மக்களோடு உள்ள தொடர்புகள் இவற்றை நம்பித்தான் உள்ளோம். பேய், பிசாசினை பார்த்து பயப்படமாட்டோம். மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்.
கூவிக் கூவி அழைத்தாலும் அவர்கள் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. அரசியல் நாகரீகத்தோடு செல்பவர்களுக்கு நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நாகரீகம் தெரியாவதர்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் பயம் என்பார்கள். இந்த கத்துகுட்டிகளுக்கு எதாவது ஒரு விதத்தில் பதில் சொல்லிவிடவேண்டும்”.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.