சென்னை:
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியதற்கான காரணம் இதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சினிமா அளவுக்கு தொலைகாட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸை விட மிகவும் பிரபலமடைந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவரை 3 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 4ஆவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் யாராவது எலிமினேட் ஆனால் மட்டுமே ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்படும். மற்றபடி இந்த நிகழ்ச்சி எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்போ, வேதனையோ ஏற்படாது.
ஸ்டிரஸ் பஸ்டர்
இது ஒரு ஸ்டிரஸ் பஸ்டர். இந்த நிகழ்ச்சியை பார்த்து நீண்டகாலமாக குழந்தையே இல்லாத எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக ஒருவர் செஃப் வெங்கடேஷ் பட்டிற்கு தெரிவித்துள்ளார். அது போல் புகழும், சிவாங்கியும் அடிக்கும் லூட்டியை பார்த்ததால் படுத்த படுக்கையாக இருந்த தனது அம்மா குணமாகிவிட்டதாகவும் பல்வேறு தரப்பினர் பலவிதமான கமெண்ட்டுகளை அளித்தனர்.
10 போட்டியாளர்கள்
இந்த 4ஆவது சீசன் கடந்த மாதம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை இயக்குநர் கிஷோர் மட்டுமே எலிமினேட் ஆகியுள்ளார். நேற்றைய தினம் மைம் கோபியும் விஜே விஷாலும் எலிமினேஷன் சுற்றிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் செய்த உணவால் செஃப்கள் வெங்கடேஷ் பட்டும் தாமோதரனும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என கூறிவிட்டனர்
கோமாளி மணிமேகலை
இந்த நிலையில் நேற்றைய தினம் கோமாளி மணிமேகலை ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் நானே வருவேன் தனுஷ் கெட்டப்பில் நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த குக் வித் கோமாளி முதல் சீசனிலிருந்து என் மீது ரசிசர்கள் அன்பை பொழிந்தீர்கள். உங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
வாய்ப்புகள்
எனக்கு கொடுத்த வாய்ப்புகளையும் சூழல்களையும் சிறப்பாக கொண்டு வர நான் கூடுதல் முயற்சிகளை எப்போதும் எடுப்பேன். இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறோன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வருத்தம்
இதற்கு சிவாங்கி, தங்கதுரை, ஸ்ருத்திகா உள்ளிட்டோர் வருத்தத்தையும் தெரிவித்து வருங்கால திட்டங்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர். அது போல் செஃப் பட் மணிமேகலை சிறந்த பெண் கோமாளி. நான் உங்களுடன் குக் வித் கோமாளி செட்டுகளில் சிறந்த நேரத்தை செலவிட்டுள்ளேன். எப்போதும் நட்சத்திரமாக ஜொலித்து உங்கள் துறையில் சிகரத்தை அடைய வேண்டும் என பிரார்த்தித்து ஆசிர்வதித்து வேண்டுகிறேன். பணிவான மனிதனாக இருக்க மறக்காதே என பட் அறிவுரை கூறியுள்ளார்.
மணிமேகலை ஏன் விலகல்
மணிமேகலை இந்த நிகழ்ச்சியிலிருந்து ஏன் வெளியேறினார் என கேட்டு பல்வேறு காரணங்கள் வட்டமடிக்கின்றன. ஒரு சிலர் அவர் விரைவில் குக்காக அடுத்த சீசனில் கலந்து கொள்வார் என்றும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இன்னும் சிலர் மணிமேகலைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என்கிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பெயர்கள்
அவர் ட்வீட்டில் கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. 3 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பெயர்களை கூட அவர் குறிப்பிடவில்லை. இதனால் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என தெரிகிறது. மணிமேகலையின் இந்த பதிவிற்கு குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்டு மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை ஆகிய நிகழ்ச்சிகளின் இயக்குநர் பார்த்தீவ் மணி, உனது வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் மணி, நீ எப்போதும் எங்கள் மிரட்டல் நாயகி. நீ எது செய்தாலும் எங்களது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் உண்டு என தெரிவித்துள்ளார். இதற்கு மணிமேகலையும் நன்றி என தெரிவித்துள்ளார்.