Thirupparankundram: திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய ‘தீபத்தூண்’ தீபம் ஏற்றப்படாமல் இருந்ததற்கான காரணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தி நவம்பர் 24-ம் தேதி மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் ஆட்சியர் விளக்கம்
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை செயல்படுத்தாததற்காக மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கூறியதோடு நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அதில் திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய ‘தீபத்தூண்’ பகுதியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. ஆனால், இந்த சடங்கை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருக்குக் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நல்லெண்ணத்துடன் நிறைவேற்ற நான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.
மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
இதில் வேண்டுமென்றே உத்தரவை மீறிய செயல் எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நான் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன். தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படாததற்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நவம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘தீபத்தூண்’ பகுதிக்கு 27 பேர் கொண்ட ஆயத்தக் குழுவினர் சென்றடையத் திட்டமிடப்பட்டிருந்தோம். இந்தக் குழுவில் திருவண்ணாமலையிலிருந்து வந்த ‘தீபம்’ தொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவர், மின்சாரப் பணியாளர்கள் 10 பேர் மற்றும் சாரக்கட்டு அமைக்கும் பணியாளர்கள் 15 பேர் இடம்பெற்றிருந்தனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை
இவர்களுடன் தேவையான உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகத்தின் முடிவால், மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஏனெனில், தீபத்தூண் விளக்கை ஏற்றுவதற்கு தகுதியான குழுவை தேவஸ்தானமே அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குழுவிற்குப் பதிலாக வேறொரு குழுவை நியமிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.
Thirupparankundram
கோயில் நிர்வாகம்
இந்த விவகாரம் குறித்து பின்னர் இரவு 8.21 மணிக்கு ஒருங்கிணைப்பு வழக்கறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டிருந்தன. எழும் எந்தவொரு சிக்கலுக்கும் உடனடித் தீர்வு காணப்பட்டது. தேவஸ்தான நிர்வாகம் குழுவிற்கு அனுமதி வழங்குவது மட்டுமே எஞ்சியிருந்த ஒரே நடவடிக்கையாக இருந்தது. மேலும், தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கு நபர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களை, கோயில் நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆதார ஆவணங்களுடன் கூடுதல் நிலவர அறிக்கையை தாக்கல் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முதற்கட்ட அறிக்கையை நீதிமன்ற பதிவில் எடுத்துக்கொள்ளுமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.