கமல்ஹாசன் திமுக-வை கடந்த தேர்தலில் விமர்சித்துப் பேசியதையும், இந்த தேர்தலில் திமுக-வை புகழ்ந்து பேசுவதையும் ஒப்பிட்டு இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் வியாழக்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது.
கமல்ஹாசன் முழு ஆதரவு:
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, தேமுதிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என பல கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மற்றொரு கட்சி மக்கள் நீதிமய்யம். கடந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக-விற்கு எதிராக 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமலே திமுக-விற்கு முழு ஆதரவை அளித்துள்ளது.
பல்லக்குத் தூக்குவேன்:
மேலும், சேலத்தில் நேற்று நடந்த திமுக கூட்டணி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் திராவிட பல்லக்கைத் தூக்குவதற்கு என் தோளைக் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக வந்திருக்கிறேன் என்றும், நான் அமரும் நாற்காலிக்காக வரவில்லை என்றும் பேசினார்.
மேலும், கடந்த தேர்தலில் திமுக-வை மிக கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன் கடந்த தேர்தல் தோல்வி முதல் திமுக-வுடன் இணக்கம் காட்டி வந்தார். பின்னர், விக்ரம் படத்திற்கு பிறகு திமுக-வுடன் நெருக்கம் காட்டியதுடன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பெற்றார். இந்த தேர்தலில் திமுக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டும், சின்னம் விவகாரம் காரணமாக போட்டியிட கமல் மறுத்தது அவரது கட்சியினருக்கே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.
அன்று எதிர்ப்பு, இன்று வரவேற்பு:
மேலும், போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த 30 வேட்பாளர்கள் செலுத்திய பணத்தையும் கட்சி நிதி என்று கூறி கட்சியின் தலைமை திருப்பித் தர மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது மக்கள் நீதிமய்யத்திற்கு பெரும் கறையாகவும் மாறியது.
சமீபகாலமாக திமுக-வைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள்தான் திமுக-வை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். திருமாவளவன், கமல்ஹாசன் என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடந்த தேர்தலில் மாற்று அரசியலை முன்னெடுத்து மக்கள் நீதிமய்ய விளம்பரத்தில் தொலைக்காட்சியை உடைப்பது போன்று நடித்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் உதயசூரியனுக்காக மிகவும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
நெட்டிசன்கள் விளாசல்:
இதனால், இணையதளவாசிகள் கடந்த தேர்தலில் கமல்ஹாசன் திமுக-வை விமர்சித்துப் பேசியதையும், இந்த தேர்தலில் திமுக-விற்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசி வருவதையும் ஒப்பிட்டு வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.