திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதைக் குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்ற கேட்டு அதற்கு கீழ்த்தரமான, கொச்சையான விளக்கம் ஒன்றைக் கொடுத்து இருந்தார்.
இது சர்ச்சையானதை அடுத்து, அமைச்சர் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து, அவர் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடி
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏப்ரல் 5ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆபாசமாகப் பேசி இருந்தார். இந்தப் பேச்சு கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் எம்.பி.யுமான கனிமொழி, இன்று காலையில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை
குறிப்பாக, ’’அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’’ என்று கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.