அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என, ராமதாஸிற்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ராமதாஸின் கோரிக்கை:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமகவில் அதிகாரம் யாருக்கு என்ற பெயரில் மோதல் வெடித்துள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணிக்கும் இடையேயான பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அன்புமணி தன்னிடம் இருந்து கட்சியை கபளிகரம் செய்ய முயல்வதாக வெளிப்படையாகவே ராமதாஸ் குற்றம்சாட்டினார். இந்நிலையில், அவர் அறிவித்த பொதுக்குழுவிற்கு எதிராக அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே தனிப்பட்ட முறையில் நான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் இருவரும் என்னை தனியே நேரில் சந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன்படி, ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராகி நீதிபதியிடம் தனது தரப்பு விளக்கங்களை எடுத்துரைத்தார். அதேநேரம், அன்புமணி தனியாக நீதிபதியை சந்தித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, நீதிமன்றத்திலும் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அன்புமணிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இறுதியில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தார். உட்கட்சி விவகாரம் தொடர்பாக ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அன்புமணி அறிவித்தபடி, அவரது தலைமையில் இன்று பாமக பொதுக்குழு கூட உள்ளது. அதேநேரம், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
தலைவராகும் அன்புமணி?
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது. அதன் முடிவில், நிர்வாகிகளின் ஆதரவுடன் அன்புமணி மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. பாமகவின் சட்டவிதிகளின்படி அன்புமணியிம் 3 ஆண்டுகால தலைவர் பதவி கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவடைந்துவிட்டது. எனவே ஒட்டுமொத்த அதிகாரமும் தனக்கே இருப்பதாக ராமதாஸ் கூறி வருகிறார். அதை மேலும் வலுப்படுத்தவே பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தன்னையே தலைவராக அறிவித்துக்கொள்ள முடிவு செய்தார். அந்த திட்டத்தை முறியடிக்கும் விதமாகவே, அன்புமணி முன்கூட்டியே இன்று பொதுக்குழு கூட்டத்தை அறிவித்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்ற ராமதாஸின் கோரிக்கையை தான், நீதிமன்றமும் புறக்கணித்துள்ளது. இதனால், அன்புமணி மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாமகவின் தலைவராவது உறுதியாகியுள்ளது.
ராமதாஸிற்கு என்ன வாய்ப்பு:
ஏற்கனவே பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கே ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பலரையும் நீக்கிவிட்டு, தனக்கு ஆதரவானவர்களுக்கு ராமதாஸ் பதவிகளை வழங்கி வந்தார். ஆனால், அதுதொடர்பான அறிவிப்புகள் செல்லாது என அன்புமணி அறிவித்து வருகிறார். இந்நிலையில் தான் உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு காண ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை அடையலாம் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அப்படியே செய்தால், தற்போது அதிமுக கட்சி தொடர்பான வழக்குகள் ஆண்டுகணக்கில் செல்வதை போன்றே நீடிக்கும். உடனடியாக எந்தவொரு தீர்ப்பும் கிடைக்காது என்பதே நிதர்சனமாக உள்ளது. எனவே, அந்த முயற்சியை ராமதாஸ் முன்னெடுப்பாரா? அல்லது மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான சூழல் அமையுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.