Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

75 0

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

போராடும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!

அறமற்ற செயல்:

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்களின் நியாயமான உரிமைக்காக போராடும் ஆசிரியர் பெருமக்களை அதிகாரத் திமிரில் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்.

இது என்ன நியாயம்?

கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்குமுன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்குக் குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15000 அளவிற்குக் குறைவாக இன்றளவும் வழங்கப்படுகிறது.

அதன்பின் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?

போராட்டம்:

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தில் தோள்கொடுத்துத் துணை நிற்கும் விதமாக நேரில் சென்று ஆதரவளித்தேன்.

அதன்பின்னர், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டபோதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்விதத் தீர்வும் வழங்கப்படாத நிலையில் மீண்டும் 27-12-2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர்.

நாடகமா?

ஆனால், திமுக அரசு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, சம ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவதைக் கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் கடந்த 2022 டிசம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2023 அக்டோபர் மாதம் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், போராட்டக் கோரிக்கைகளுக்கு நேரில் சென்று ஆதரவளித்தேன். ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய திமுக அரசு அமைத்த குழு என்னானது? அக்குழு அமைத்த பரிந்துரைகள் என்ன? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வழக்கம்போல் இக்குழுவும் கிடப்பில் போடும் நாடகமா?

நீதி கிடைக்கவில்லை:

ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சிகளினது அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை.

கடந்த முறை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பெருமக்களின் போராட்டத்தில் பங்கேற்க நான் சென்றபோது அனுமதி மறுத்த திமுக அரசு, தற்போதும் நான் இடைநிலை ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்க செல்வதை அறிந்து அவசர அவசரமாக ஆசிரியர் பெருமக்கள் மீது அடக்குமுறையை ஏவி கைது செய்துள்ளது அதிகாரத்திமிரின் உச்சமாகும்.

தடுப்பது ஏன்?

நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் என்னைக் கண்டு அரசு ஏன் பயப்பட வேண்டும்? ஆசிரியர் பெருமக்களை நேரில் சந்தித்து அவர்கள் போராட்டத்திற்கு நான் துணை நிற்பதை  திமுக அரசு தடுப்பது ஏன்? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக பெருமைப்படும் திமுக அரசு, மாணவர்களுக்கு நல்ல கல்வியை தரும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பது ஏன்? மாணவர்களுக்கு மடிக்கணினி தருவதாக கூறும் திமுக அரசு,  அறிவைப் புகட்டும் ஆசிரியர்களை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதற்கு பெயர்தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா?  மாணவர்களுக்கு தேவை பணமல்ல நல்ல கல்விதான் என்பதை திமுக அரசு உணரப்போவது எப்போது?

ஆசிரியர்களுக்கு ஆதரவு:

தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது. ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…

தினகரனை வரவேற்கிறேன்” – இபிஎஸ்

Posted by - January 21, 2026 0
சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி…

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

Posted by - July 18, 2025 0
பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *