சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது.
TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது, சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரச்னையாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, SIR-க்கு முன்பாக 6.41 கோடியாக இருந்த மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.67 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 74 லட்சம் பேரின் பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோரின் பதிவுகள் இரட்டை வாக்குரிமை, புலம்பெயர்வு மற்றும் இறப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வாக்காளர்களை இழந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வாக்காளர்கள் விவரம்:
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பிறகு, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து நான்காயிரத்து 694 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 ஆக குறைந்தது. அதாவது சுமார் 3 பேரில் ஒருவர் என, மொத்தம் 11 லட்சத்து 73 ஆயிரத்து 758 வாக்காளர் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை இழந்த, முதன்மையான 5 சட்டமன்ற தொகுதிகளும் சென்னை மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே, சென்னையில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன. அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தற்போது பல ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டது, வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது.
அதிக வாக்காளர்களை இழந்த தொகுதிகள்
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்காளர்களை இழந்த தொகுதியாக அண்ணா நகர் உள்ளது. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, 99 ஆயிரத்து 20 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இருந்து, 35 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ஆயிரம் விளக்கு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் வேளச்சேரி தொகுதியில் இருந்து மட்டும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 829 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- அண்ணா நகர் – 99,020 வாக்காளர்கள் நீக்கம்
- ஆயிரம் விளக்கு – 84,466 வாக்காளர்கள் நீக்கம்
- கொளத்தூர் – 83,402 வாக்காளர்கள் நீக்கம்
- வில்லிவாக்கம் – 80,702 வாக்காளர்கள் நீக்கம்
- தியாகராய நகர் – 80,554 வாக்காளர்கள் நீக்கம்
சென்னை – தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்:
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் SIR-க்கு முன்பாக இருந்த வாக்காளர் விவரங்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மற்றும் நீக்கப்பட்ட பதிவுகள் என ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதுபோக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.
| தொகுதிகள் | SIR-க்கு முன்பாக | வரைவு வாக்காளர் பட்டியல் | இறுதி வாக்காளர் எண்ணிக்கை | நீக்கப்பட்ட பதிவுகள் | 2021 தேர்தலில் வெற்றி வித்தியாசம் |
| ஆர்.கே. நகர் | 2,35,272 | 1,78,356 | 1,95,856 | 39,416 | 42,479 வாக்குகள் |
| பெரம்பூர் | 2,97,526 | 2,00,181 | 2,22,792 | 74,734 | 54,976 வாக்குகள் |
| கொளத்தூர் | 2,90,653 | 1,86,841 | 2,07,251 | 83,402 | 70,384 வாக்குகள் |
| வில்லிவாக்கம் | 2,40,466 | 1,42,706 | 1,59,764 | 80,702 | 37,237 வாக்குகள் |
| திரு.வி.க. நகர் | 2,23,571 | 1,64,528 | 1,78,793 | 44,778 | 55,013 வாக்குகள் |
| எழும்பூர் | 1, 97,465 | 1,22,607 | 1,34,879 | 62,586 | 38,768 வாக்குகள் |
| ராயபுரம் | 1,98,576 | 1,46,865 | 1,56,931 | 41,645 | 27,779 வாக்குகள் |
| துறைமுகம் | 1,80,341 | 1,10,517 | 1,16,896 | 63,445 | 27,274 வாக்குகள் |
| சேப்பாக்கம் | 2,40,087 | 1,50,846 | 1,63,886 | 76,201 | 69,355 வாக்குகள் |
| ஆயிரம் விளக்கு | 2,38,374 | 1,41,393 | 1 ,53,908 | 84,466 | 32,462 வாக்குகள் |
| அண்ணா நகர் | 2,80,422 | 1,62,135 | 1,81,402 | 99,020 | 27,445 வாக்குகள் |
| விருகம்பாக்கம் | 2,85,947 | 1,75,123 | 1,96,536 | 89,411 | 18,367 வாக்குகள் |
| சைதாப்பேட்டை | 2,73,717 | 1,86,489 | 2,00,697 | 73,020 | 29,408 வாக்குகள் |
| தி,.நகர் | 2,35,497 | 1,39,498 | 1,54,943 | 80,554 | 137 வாக்குகள் |
| மயிலாப்பூர் | 2,69,260 | 1,81,592 | 1,94,731 | 74,529 | 12,633 வாக்குகள் |
| வேளச்சேரி | 3,17,520 | 1,89,999 | 2,11,691 | 1,05,829 | 4,352 வாக்குகள் |
சிட்டியில் திமுகவின் ஆட்டம் ஓவர்?
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக களம் கொண்டு, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன்வசப்படுத்தியது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரோடு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர். அதேநேரம், 14 தொகுதிகளில் தற்போது நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும், மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தியாகராய நகரில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்திலும், வேளச்சேரியில் 4,352 வாக்குகள் வித்தியாசத்திலுமே திமுக வெற்றியை ஈட்டியுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சென்னை மாவட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஸ்டார் தொகுதிகள்
- முதமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலிருந்து 83,402 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
- துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியிலிருந்து 76,201 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
- அமைச்சர் மா.சுப்ரமணியனின் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 73,020 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
- அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் தொகுதியிலிருந்து 63,445 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன