தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிஷுட்டிங்கிற்காக மும்பை சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறப்படுகிறது.
TVK Vijay: இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய், மும்பை சென்றுள்ளார்.
மும்பையில் தவெக தலைவர் விஜய்..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே, முதல்முறையாக களம் காணும் விஜய் தலைமையிலான தவெக, கூட்டணி இன்றி 234 தொகுதிகளிலும் தணித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நேற்று இரவு அவர் மும்பை சென்றடைந்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதனை அடிப்படையாக கொண்டு இணையத்தில் ஏராளமான கட்டுக்கதைகள் பரவ தொடங்கியுள்ளன.
ஜனநாயகன் பேட்ச் வொர்க்?
குறிப்பாக பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்த, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் சென்சார் பிரச்னையால் திரைக்குவரவில்லை. அந்த படத்தை அண்மையில் தணிக்கை குழு பார்த்து முடித்துவிட்டதாகவும், இதையடுத்து மேற்கொள்ளவிருக்கும் கதை திருத்தங்களுக்கு ஏற்ப, சில காட்சிகளில் நடித்து கொடுக்கவுமே, விஜய் மும்பை சென்றுள்ளார் என பலரும் இணையத்தில் பதிவிட தொடங்கினார். இனி நடிக்கவே மாட்டேன் என சொன்ன விஜய் மீண்டும் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார் என ஒரு தரப்பினரும், தயாரிப்பாளரின் வலியை புரிந்து அவர் நடித்து கொடுக்க முன்வந்துள்ளார் என்று மற்றொரு தரப்பினர் களமாட தொடங்கிவிட்டனர். ஆனால், உண்மையில் அவர் சினிமா தொடர்பான எந்த பணிக்காகவும் மும்பை செல்லவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அட்லி வீட்டில் விசேஷம்..
இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா இரண்டாவது முறையாக கருவுற்று இருப்பதாகவும், அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுமே விஜய் மும்பை சென்றுள்ளார். ராஜா ராணி எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான அட்லி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று முக்கிய கமர்ஷியல் படங்களை விஜயை வைத்து இயக்கினார். இதனால், அவர்களுக்கு இடையே வலுவான நட்பு தொடர்கிறது. அதன் அடிப்படையிலேயே அட்லியின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க விஜய் சென்றுள்ளார். பிகில் படத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை எடுத்து அதிரிபுதிரி ஹிட் கொடுத்த அட்லி, தற்போது அல்லு – அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனேவை வைத்து பிரமாண்ட பொருட்செலவில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே, விஜய் அரசியலில் நுழைந்த பிறகு அவரது சின்ன சின்ன அசைவுகளும் மிகவும் தீவிரமாக நெட்டிசன்களால் கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.