கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
யார் யார் என்னென்ன தொகுதி?
கடந்த தேர்தலில், நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு எம்எல்ஏவாக வென்ற திருநெல்வேலி தொகுதி, இம்முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
அதேபோல கரூர் தொகுதி அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு, கடந்த 20221ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு, இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த 2026ஆம் ஆண்டு தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியான நிலையில், அரவக்குறிச்சி, சிங்காநல்லூர் என இரண்டு தொகுதிகளுமே பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
வானதி சீனிவாசனுக்கு தொகுதி மாற்றமா?
கோவை தெற்கு எம்எல்ஏவாக இருப்பவர் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. பதிலாக கோவை வடக்கு தொகுதியை பாஜக கேட்டுப் பெற்றுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறாத சூழலில், தாராபுரம் தொகுதியும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
தமிழிசை செளந்தர்ராஜன் வேளச்சேரி தொகுதியில் 2011ஆம் ஆண்டு தேர்தலிலும் விருகம்பாக்கம் தொகுதியில் 2016ஆம் ஆண்டிலும் பாஜக சார்பில் போட்டியிட்டார். இந்தத் தொகுதிகளும் பாஜகவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்படவில்லை.
என்ன காரணம்?
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்தும் வெற்றி வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பாஜகவேதான் தேர்வு செய்து கொடுத்ததாகவும் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் தொகுதியை மாற்றி நிற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக வானதி கோவை தெற்கு தொகுதியிலும் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
அதேபோல தமிழிசை செளந்தர்ராஜன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர். மேலும் எல்.முருகன் தேசிய அரசியலில் மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றுவதால், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் நிற்க ஆசைப்படவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.