TVK Vijay: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதுமே தலைமை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய அதிகாரிகள் பட்டியலை தயார் செய்யும் பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளாராம்.
TVK Vijay: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகளை கலைத்து போட தயாரான விஜய்..!
சட்டமன்ற தேர்தல் முடிவில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெருங்கட்சியாக, தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை குறித்து கவலைப்படாமல் விரைந்து முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வருகிறார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதோடு, நாளையே நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே, அனைத்து துறைகளிலும் தங்களுக்கு ஏதுவான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான பட்டியலை தயார் செய்யும் பணிகளையும் தவெக தலைமை முன்னெடுத்துள்ளது.
அதிகாரிகள் மாற்றம் ஏன்?
தேர்தலுக்கு பிறகு அமையும் எந்தவொரு அரசும், முந்தைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தலைமை செயலாளர், சட்ட ஒழுங்கு டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் உளவுத்துறை டிஜிபி உள்ளிட்ட மிகவும் முக்கியமான அதிகாரிகளை மாற்றுவது வழக்கம். அதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாற்றப்படுவார்கள். இதன் மூலம் தங்களுடன் இணங்கி செயல்படக்கூடிய அதிகாரிகளை கொண்டு, அரசு இயந்திரத்தை எந்தவித சிக்கலும் இன்றி இயக்கமுடியும் என கருதுகின்றனர். அதே பாணியில் தான் விஜயும் தலைமை செயலாளர் தொடங்கி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை போன்ற மாநகராட்சிகளின் ஆணையர்கள் போன்றோரையும் மாற்ற உள்ளாராம்.
லிஸ்டை தயார் செய்யும் அருண் ராஜ்?
முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் தான் புதிய அதிகாரிகளுக்கான பட்டியலை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மட்டுமே ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உடன் நெருக்கமான பழக்கம் கொண்டவராக இருப்பதோடு, நிதிப்பிரிவை கையாள்வதிலும் அனுபவம் கொண்டவராகவும் இருக்கிறார். அதன் காரணமாகவே அதிகாரிகளை தேர்வு செய்யும் பணிகளை அருண் ராஜிடம் விஜய் ஒப்படைத்துள்ளாராம். முதலமைச்சராக பதவியேற்று அமைச்சரவை இறுதியான பிறகு, அதிகாரிகள் பணியிட மாற்றம் தான் விஜயின் முக்கிய பணியாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையின் புதிய கமிஷ்னர் யார்?
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அபின் தினேஷ் மோடக் எனும் சென்னை காவல் ஆணையரை மாற்றி, அவரது இடத்தில் அமல்ராஜ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று தமிழக உளவுத்துறை டிஐஜி ஆக உள்ள பால நாக தேவியும் மாற்றப்பட்டு, அந்த பதவிக்கு தர்மராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தலைமை செயல் அதிகாரி சாய்குமார், சட்ட-ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரும் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பதவிகளை வகிப்போரும் தினசரி முதலமைச்சரை சந்திக்கும் நிலையில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் ஆவர். எனவே அவர்களது நியமனம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.