கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லையென திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் மாணிக்கம் தாகூர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே மாணிக்கம் தாகூர் பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெருங்கும் தேர்தல்- திமுகவின் கூட்டணி வியூகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுக திட்டமிட்டு, அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பலம் வாய்ந்த கூட்டணியோடு தேர்தலை சந்திக்க திமுக வியூகம் வகுத்து வரும் நிலையில், இதற்கு தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டை போட்டு வருகிறது காங்கிரஸ்.
கடந்த நவம்பர் மாதமே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி குழு அமைத்தது. அந்த குழுவும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். அப்போதே ஆட்சியில் பங்கு என்பதையும் 45 தொகுதிகள் வேண்டும் என்ற பட்டியலையும் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலிடம் வழங்கியதாக கூறப்பட்டது. ஆனால், இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுக, இதுவரை அந்த இடத்தில் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு செல்லவும் இல்லை. தொகுதி பங்கீட்டு குழுவையும் அமைக்கவில்லை.
திரும்பத் திரும்ப பேசுற நீ !
இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை சீண்டும் விதமாக அடுத்தடுத்து வெளிப்படையாகவே கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன் வைத்து தொடர்ந்து பேசி வருகின்றனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக அறியப்படும் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் திமுகவை கடுமையாக எதிர்த்தனர். இதனால் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்து வந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமை திமுக-வோடு இணக்கமாக இருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே இது போன்று தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிப்பதாக சொல்லப்பட்டது.
முற்றுபுள்ளியை மீண்டும் காற்புள்ளியாக்கிய மாணிக்கம்
இதற்கு ஏற்ப டெல்லிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அழைத்த தேசிய தலைமை, ஆட்சியில் பங்கு என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிலையில் தான் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், ஆட்சியில் பங்கிற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லையென உறுதியாக தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், மீண்டும் திமுகவை சீண்டியிருக்கிறார் மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும், . 2006லேயே மக்கள் தீர்பை செயல்படுத்தாமல் நம் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது என்றும் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலும் திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையிலும் பதிவிட்டிருந்தார்.
திமுகவை மீண்டும், மீண்டும் சீண்டும் வகையில் மாணிக்கம் தாகூரின் பதிவுகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கண் அசைவின் படியே நடைபெறுவதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையின் சம்மதம் இல்லாமல், அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் தாமாகவே கருத்து தெரிவிக்கின்ற துணிச்சல் தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு இல்லையென்றே கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, தனக்கு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட் என ராகுல்காந்தி தொடர்ந்து பேசவைத்து வருவதாக அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கிறார்கள்.
ராகுல்காந்திக்கு நெருக்கமான மாணிக்கம் தாகூர்
அப்படி ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரக் குழுவில் ஒருவராக இருப்பவர்தான் மாணிக்கம் தாகூர். ராகுல் காந்தியை பற்றி பாஜக நாடாளுமன்றத்தில் ஏதாவது விமர்சித்தால் உடனடியாக மல்லு கட்டிக்கொண்டு சண்டைக்கு செல்கின்ற நபர்களில் முதல் நபராக இருப்பவர்தான் மாணிக்கம் தாகூர். எனவே ராகுல் காந்தி, தான் பேச நினைப்பதை மாணிக்கம் தாகூர் மூலம் பேச வைக்கிறார் எனவும் பேச்சு அடிபட்டு வருகிறது.
களத்தில் நடக்கப்போவது என்ன ?
கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற இந்த திட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டாலும், இது களத்தில் பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அதுவும் இப்படியான முரண்பாடுகளுக்கு பின்னர் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்தே தேர்தலை சந்தித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுகவினரும் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பணிகளை கவனிப்பார்களா? என்பதுதான் இப்போது இருதரப்பிலும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.