இந்தத் தேர்தலில் திமுக-வின் வெற்றிக்காக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனி டிராக்கில் களப்பணியாற்றி வருகிறார்.
சபரீசனின் ‘பென்’ நிறுவனப் படையினர் உடனுக்குடன் சர்வேக்களை எடுத்து திமுக-வின் சாதக பாதகங்களை சமர்ப்பித்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அதிகமான ஃபாலோயர்களுடன் இயங்கும் பிரபல்யமான முகங்களுக்கு ‘தேவையான’ கன்டென்ட்களைக் கொடுத்து கருப்பு – சிவப்பு சாயல் வராத அளவுக்கு அவர்களை திமுக-வுக்கு ஆதரவாகப் பேசவைப்பதில் பெரும்பங்காற்றுகிறது ‘பென்’ டீம். வேட்பாளர் தேர்விலும் இவர்களின் ‘பேக் வொர்க்’ இம்முறை பிரதானமாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், இத்தனை நாளும் சென்னையில் இருந்து கொண்டு தனது பரிவாரங்களை மாநிலம் முழுக்க இயக்கி வந்த சபரீசன், தற்போது நேரடியாகவே களத்துக்கு வந்து கட்சியின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியினர் மட்டுமல்லாது, அந்தந்தப் பகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் சமூகங்களைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி திமுக-வுக்காக ஆதரவு திரட்டி வருகிறார் சபரீசன்.
சபரீசனுக்கு பூர்விகம் திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகபுரம் கிராமம். இங்குள்ள வீட்டில் தான் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து அவர் ஆலோசனை நடத்துவார். ஆனால், இது தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட திமுக அலுவலகத்துக்கே விசிட் அடித்து கட்சி நிர்வாகிகளுடன் ஒன் டு ஒன் சந்திப்புகளை அவர் நடத்தி வருவது பேசுபொருளாகி இருக்கிறது.
தென் மண்டல திமுக பொறுப்பாளரான கனிமொழி தனது மண்டலத்தில் திமுக-வின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார். அதற்காக இவரும் அடிக்கடி திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். இந்த நிலையில் சபரீசனும் நேரடியாகக் களத்துக்கு வந்து கருத்துக் கேட்க ஆரம்பித்திருப்பது திமுக-வினர் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட திமுக மூத்த நிர்வாகி ஒருவர், “இந்தத் தேர்தல் திமுக-வுக்கு மிக முக்கியமான ஒன்று. அதனால் தான் ஒட்டுமொத்த தலைவர் குடும்பமும் ஆளுக்கொரு திசையில் பம்பரமாக சுற்றுகிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சியினருடான ஒன் டு ஒன் சந்திப்பை சபரீசன் நடத்தி இருக்கிறார். தனது விசிட்டின் போது, தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்துப் பேசி வருகிறார்” என்றார்.
2021 தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதிக்கு பரிசாக அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றதை அடுத்து துணை முதல்வர் அந்தஸ்தும் உதயநிதியைத் தேடி வந்தது. அதேபோல், இதுவரை திரை மறைவிலேயே செயல்பட்டு வந்த சபரீசன் இம்முறை நேரடியாகவே களத்துக்கு வந்திருப்பதை அடுத்து அவரும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற பேச்சுகள் இப்போதே வலம் வரத் தொடங்கிவிட்டன. அடுத்ததாக திமுக சார்பில் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்படும் நபர்களில் சபரீசனும் ஒருவராக இருக்கலாம் என்றொரு செய்தி நீண்ட நாட்களாகவே அறிவாலயத்தை வட்டமிடுவது குறிப்பிடத்தக்கது.