ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
விஜய் அரசியலுக்கு வந்தது தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கும் அனுகூலமாகிவிட்டது. டிடிவி தினகரன், அன்புமணி தொடங்கி கிருஷ்ணசாமி வரை தவெகவை வைத்து கேம் ஆடிய நிலையில், காங்கிரஸும் விஜய்யை வைத்து திமுகவுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸில் கலகக் குரல்கள் அதிகமாகியிருக்கிறது. ‘ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகம் தொகுதிகள் வேண்டும்’ என்பதை அழுத்தமாக சொல்லி வருகின்றனர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர். இவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதுபோல டெல்லி தலைமையும் பெரிதாக கண்டிக்காமல் அப்படியே விட்டுவிட்டது.
2006-ல் 34 தொகுதிகளில் வென்று, 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த திமுகவுக்கு ஆட்சியில் பங்கு கோராமலேயே பரிபூரண ஆதரவளித்தது காங்கிரஸ். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் 2016-ல் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் மட்டுமே கொடுத்தது திமுக.
இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் ஒத்துவராது என்று உறுதியாக சொல்லியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என கிளப்பி விட்டு, சிலர் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும்” என பொட்டில் அடித்தாற்போல சொல்லியுள்ளார்.