என்ன காரணம் தெரியுமா?
தமிழ்நாட்டில் தாங்கள் பலவீனமாக உள்ளதாக கருதப்படும் 70 தொகுதிகளில் திமுக கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என ஆளுங்கட்சியான திமுக-விற்கு சவால் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது.
70 தொகுதிகளில் கூடுதல் கவனம்:
வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் திமுக கூட்டணி களமிறங்கியுள்ளது. இந்த முறை கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி ஒதுக்கீடுகள் என்ற கோரிக்கையை வலுப்படுத்தி வருகிறது. இதனால், வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் களமிறங்க திமுக திட்டமிட்டுள்ளது.
இதற்காக, களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ள திமுக வரும் தேர்தலில் தாங்கள் பலவீனமாக உள்ள 70 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. திமுக-வின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் மட்டும் இதில் 4 தொகுதிகள் அடங்கும்.
சென்னையிலும் பலவீனம்:
சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் திமுக பலவீனமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 22 தொகுதிகளிலும் இந்த முறை திமுக-விற்கு சவால் அளிக்கும் தொகுதிகளாகவே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதிகளிலும் களப்பணியைத் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சவால் தரும் கொங்கு:
இந்த தொகுதிகள் மட்டுமின்றி அதிமுக பலமாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் திமுக தனது வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பணியாற்றி வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக-வின் மிகப்பெரிய பலமாக உள்ளார். அவரது கண்காணிப்பின் கீழ் உள்ள 31 தொகுதிகள் திமுக-விற்கு சவால் அளிக்கும் தொகுதியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காகவே பிரத்யேக வியூகங்கள், திட்டங்களை திமுக வகுத்து வருகிறது. கோவையில் மட்டு் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் திமுக தோல்வியைத் தழுவியது. இந்த பகுதிகளில் செந்தில் பாலாஜியே தீவிரமாக பணியாற்றியும் திமுக-வால் வெற்றியைப் பதிவு செய்ய இயலவில்லை.
இபிஎஸ் கோட்டை சேலம்:
வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் சில தொகுதிகளிலும் திமுக சற்று பலவீனமாகவே கருதப்படுகிறது. ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த தேர்தலில் 1100 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றது. வேலூர் சுற்றுவட்டாரத்திலும் சில தொகுதிகள் திமுக-விற்கு சவால் தரும் வகையில் மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுக தோல்வியைத் தழுவியது. இதனால், இந்த தேர்தலில் எடப்பாடியின் கோட்டையாக உள்ள சேலம் மாவட்டத்தில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் திமுக நிர்வாகிகள்.
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் இந்த முறை திமுக-வே களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தல் ஆளுங்கட்சியான திமுக-விற்கு மிகப்பெரிய அளவில் சவால் அளிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.