‘இந்தியா டு டே நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் விஜய் 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும், இது திரைப்படத்திலும் கனவிலுமே நடக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்’
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பல நிறுவன கருத்துக் கணிப்புகள் திமுகவே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், டைம்ஸ் நவ், வோட் வைஃப் ஆகிய நிறுவன கருத்துக் கணிப்புகள் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.
வெளியான அதிர்ச்சி முடிவுகள்
அதே நேரத்தில், மற்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் எல்லாம் விஜய் கட்சிக்கு அதிகப்பட்சம் 24 இடங்கள் வரை கொடுத்த நிலையில், இந்தியா டு டே கருத்துக் கணிப்பு மட்டும் வித்தியாசமாக தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளையெல்லாம் தாண்டி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதில், தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் ஆட்சி அமைப்பாரா?
ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில், இந்தியா டு டே கருத்துக் கணிப்பு அடிப்படையில் அதிகப்பட்சம் விஜய் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனல், 98 முதல் என தொடங்கியுள்ளதால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான அந்த மேஜிக் எண்ணான 118 இடங்களை விஜய் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது நடக்கவே நடக்காது – அரசியல் விமர்சகர்கள்
ஆனால், இந்தியா டூ டே நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டவை ? எத்தனை தொகுதிகளில் எடுக்கப்பட்டவை ? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் அதோடு, கட்சியை தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் இவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் செல்லுமிடமெல்லாம் அவரை பார்க்கவும், சந்திக்கவும் பெரும் கூட்டம் வருவதை வைத்தே இப்படியான கணிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையில் விஜய் 90 தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற சாத்தியமே இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.