15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மான நஷ்ட ஈடாக வழங்கப்படும் ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.