கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன் – அண்ணாமலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள என் மண், என் மக்கள் யாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். நடைபயணத்தின் போது மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடியின் சாதனைகளையும் பிரச்சாரம் செய்து வந்தார். தமிழகத்தில் 190க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வருகிற 27ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் நடைப்பயணத்தின் நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். வரும் 27ம் தேதி பல்லடத்தில் பாத யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது. கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன், நானும் பாஜகவின் ஒரு சாதாரண தொண்டன். அனைவரும் சமம் என்பதே பாஜகவின் கொள்கை கோட்பாடு.” என தெரிவித்தார்.