இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது பொது மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில், விலைக் குறைப்புக்குப் பதிலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயருமா?
இந்த கலால் விலை உயர்வு நாளை (ஏப்ரல் 8ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’கலால் விலை உயர்வால், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’’ என்று பதிவிட்டுள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசின் வரி விதிப்பால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன் பறிக்கப்படுவதாகப் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரியை உயர்த்தி விலைக் குறைப்பு தடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடும் வீழ்ச்சி அடைந்த கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை 4.5% குறைந்து, ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்கப்படுகிறது. ஃப்ரண்ட் கச்சா எண்ணெயும் 4.39 சதவீதம் விலை குறைந்து, 62.7 டாலருக்கு விற்பனை ஆகிறது.