இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம் முடிஞ்சு போய்விட்டதாக என நடிகை வினோதினி வைத்தியநாதன் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்
வினோதினி வைத்தியநாதன் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுவாக 28-38 வயது தமிழ்நாட்டுப் பெண்கள் தைரியமானவங்களா இருப்பாங்க, பேசுவாங்க. நம்பிக்கையாக இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா, புலியா, கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க. ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ ஒரு சிலரைத் தவிர உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க.
பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’ஸ் கிட்ஸ், செல்ல இளவரசியாக வளர்ந்த பெண்கள் கல்யாணத்துக்கு எந்த பிரபலத்தை மேக்கப்புக்கு புக் பண்ணலாம், கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம். இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலைப்படுத்தறாங்க.
இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் ரூ.1,000 வருதா… நல்லது. பொங்கலுக்கு ரூ.3,000 வருதா… புருஷன் ரூ.20,000 கொண்டு வராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க.
இந்த மாதிரி பெண்கள் விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத ஆணா தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும்.
இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க.
இந்தப் பெண்கள் கொத்து கொத்தா போய் தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது.
இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவுப்படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட பெரிய அன்பை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப் பெண்களில் பலர் எனக்குத் தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. இது விஜயால் உருவான பிரச்சனையல்ல. இன்னிக்கு விஜய் இடத்துல இதே வயது எந்த மாஸ் ஹீரோ இருந்திருந்தாலும் இது இப்படித்தான் நடக்கும். இது நம்ம சமூகத்துல ஆரம்பிச்ச விஷயம்” என வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு விலகிய நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.