சென்னை:
அழகுக்காக மட்டுமே நினைத்து, பலரால் ஒதுக்கப்படுவது மருதாணி.. உண்மையை சொல்லப்போனால், இந்த மூலிகையின் அற்புத பலன்களை பட்டிலியட்டு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நீளும் நன்மைகளை, தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன இந்த குட்டி குட்டி மருதாணி இலைகள்.
முருங்கை மரத்தை போலவே, வாழை மரத்தை போலவே, ஆல மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, இந்த மருதாணியின் மொத்த பாகங்களும் நன்மைகளை தரக்கூடியவை.
பூக்கள்:
இலைகள், பட்டை, மலர், பூக்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை பெற்றிருக்கின்றன. இந்த இலைகளை பறித்து விழுதாக அரைத்து வைத்து கொண்டால், எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தி தீர்வுகளை காணலாம்.
மருதாணியின் பிரதான நன்மை என்னவென்றால், நரம்புகளை பலப்படுத்துவதுதான்.. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும். காலில் சரியான ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பாதங்களில் ஒருவித எரிச்சலும் உண்டாகும்.. அதேபோல சிலருக்கு கை கால் குடைச்சலும் இருக்கும்.. இதற்

கெல்லாம் அருந்தாகிறது மருதாணி. மருதாணி இலைகளை அரைத்து, கை, கால் விரல்கள், பாதங்களில் தடவும்போது, ரத்த ஓட்டம் சீராக கிடைக்கும்.. கை, கால்களில் மருதாணி வைக்க முக்கிய காரணமே இதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.
உள்ளங்கை:
அதுவும் உடலில் இருக்கிற மொத்த நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைத்தால், உடம்பின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆனால், மருதாணி இலை குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், இதனுடன் நான்கைந்து நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.
குளிர்ச்சியை தரக்கூடிய இந்த மருதாணி, நம் உடலிலுள்ள எத்தனையோ கிருமிகளையும், நச்சுக்களையும் அழிக்க வல்லது.. அதனால்தான், நகசுத்தி வந்தால் சிலர் இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைப்பார்கள்.. சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி இதற்கெல்லாம்கூட, இந்த இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து கட்டி வந்தால் பலன் கிடைக்கும்.
மருதாணி இலைகள்:
பித்தத்தை நீக்கக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது. இப்படி அடிக்கடி மருதாணியை கை, கால் விரல்களில் பூசி வந்தால், மனநோய் ஏற்படுவதும் தடுக்கப்பட்டுவிடும். ரத்த சுத்திகரிப்பில் மருதாணியின் பங்கு அபாரமாக உள்ளது.. அவ்வப்போது, ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை, நீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிப்பாகும். ரத்தத்திலுள்ள நச்சுக்களும் வெளியேறும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்.
இளநரை:
தலைமுடி வளர்ச்சிக்கும், இளநரை தடுப்பிற்கும், இந்த மருதாணி இலையை தாராளமாக பயன்படுத்தலாம். மருதாணி இலைகளை கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, சிறு சிறு உருண்டைகளாக்கி கொள்ள வேண்டும். இவைகளை தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்து, ஒரு நாள் முழுக்க அப்படியே விட்டுவிட வேண்டும். மறுநாள் அந்த எண்ணெய்யை வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.. இளநரையும் மறையும்.. தலையில் பூச்சிவெட்டுக்கள், புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்.
தோல் அடுக்குகள்:
மருதாணி அரைத்து வைத்ததுமே நம்முடைய கைகள் சிவந்து விடுகிறதே ஏன் தெரியுமா? நம்முடைய தோலில் மொத்தம் 4 அடுக்குகள் இருக்கின்றன.. முதல் அடுக்கு பெயர் ஸ்டிராடம் கார்னியம் என்பதாகும்.. 2வது அடுக்கு பெயர் எபிடெர்மிஸ்.. 3வது அடுக்கு பெயர் டெர்மிஸ். 4வது அடுக்கு பெயர் சப் கியூடனியஸ்.
நாம் மருதாணியை அரைத்து கைகளில் பூசியதுமே, அதிலுள்ள சிவப்பு நிறமிகள் தண்ணீரில் கலந்து, ஸ்டிராடம் கார்னியம் அதாவது முதல் அடுக்கு தோலில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக உள்ளே நுழைகிறது.. அப்போது, 2வது, 3வது அடுக்களுக்கு இடையில் இந்த நிறமிகள் பிடித்து கொள்ளப்பட்டும். வெப்பமயமாதல் காரணமாக, காற்று கொஞ்ச தண்ணீர் ஆவியாகிவிடும். மீதமுள்ள நிறமிகள் கையின் தோலிலேயே தங்கிவிடும். அதனால்தான், கைகள் சிவப்பாகின்றன.
மருதாணி:
ஆனால், இதே மருதாணியை நகத்தில் வைத்தால், நகத்திலுள்ள ராமெல்லார் என்ற அடுக்கில் இறுக்கமாக பிடித்து கொள்ளும். எப்போதுமே நகத்தில் உள்ளதைவிட தோலில் உள்ள நுண்ணிய தளைகள் பெரியவை என்பதால், கைகளில் மருதாணி விரைவாக அழிந்துவிடுகிறது. நகத்தில் துளைகள் சிறியது என்பதால், நீண்ட நாளைக்கு நிறமிகள் நகத்தில் தங்கிவிடுமாம்.