ADMK On CM Vijay: தமிழ்நாட்டையும், உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களின் பாதுகாப்பையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் என முதலமைச்சர் விஜயை அதிமுக சாடியுள்ளது.
ADMK On CM Vijay: முதலமைச்சர் விஜயை திமுக பாணியிலேயே விமர்சிக்க அதிமுக முடிவு செய்துள்ளதை சமூக வலைதள பதிவுகள் மூலம் உணர முடிகிறது.
கடுமையாக சாடும் அதிமுக
சட்ட ஒழுங்கு பிரச்னைகளை குறிப்பிட்டு, முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து அதிமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “மதுராந்தகம் அருகே 75 வயது மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து – கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி. வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுப்பு. ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம். நெல்லை – தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்.
”PR பில்டப்-லாம் போதும் சிஎம் சார்”
பொய்க்கால் குதிரை அரசே, இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா? மாற்றம், புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா? குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை! ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம Silent mode-ல வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது.PR பில்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும், உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க” என அதிமுக சாடியுள்ளது.
திமுக பாணியில் அதிமுக
மேற்குறிப்பிடப்பட்ட பதிவினை முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கிற்கோ அல்லது தவெகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கோ டேக் செய்யாமல், நேரடியாக நடிகர் விஜய் என்ற ட்விட்டர் கணக்கிற்கு அதிமுக ஐடி விங் டேக் செய்துள்ளது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் ஆகியோரும் விஜயை கண்டிக்கும்போது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை தவிர்த்து, நடிகராக இருக்கும்போது விஜய் பயன்படுத்திய ட்விட்டர் கணக்குகளை டேக் செய்கின்றனர். இதன் மூலம், இன்னும் அவர் ஒரு நடிகர் மட்டுமே என மறைமுகமாக உணர்த்துவதை திமுக மற்றும் அதிமுக விரும்புவதாக தெரிகிறது.
தவெகவினர் பதிலடி
மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டு, தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் பேசி வருகின்றனர். அதேநேரம், முன்னதாக விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற திராவிட கழகங்கள். தற்போது அரசை விமர்சிப்பதற்காக கூட்டணி அமைத்துள்ளன என சாடி வருகின்றனர். விஜயை வெறும் நடிகராக சிறுமைப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டதன் காரணமாகவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுமே தோல்வி கண்டன. அதிலிருந்தும் பாடம் கற்காமல் தற்போதும் விஜய் நடிகராக இருக்கும்போது பயன்படுத்திய ட்விட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்புவதன் மூலம், தங்களது அகங்கார மனநிலையில் இருந்து இரண்டு கட்சிகளுமே கீழே இறங்கிவில்லை என்பதையே காட்டுகிறது என தவெகவினர் விமர்சித்து வருகின்றனர்.