அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி இருப்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக மட்டுமின்றி, ‘இது குதிரைபேர முயற்சி’ என குற்றம்சாட்டி காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.
தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற முடியாமல் போனது தவெக தலைவர் விஜய்க்கு சங்கடத்தை கொடுத்தது. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க முடியாமல் சில நாட்கள் போராடியது அவருக்கு நெருடலாகவே இருந்தது. ஒருவழியாக நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. இடதுசாரிகள் தவிர மற்றோருக்கு அமைச்சரவையிலும் இடமளித்தது தவெக.
ஒருபக்கம் மேற்கண்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தாலும், 5 ஆண்டு காலமும் இவர்கள் தயவோடே காலம் நகர்த்த முடியுமா என்ற கேள்வியும் தவெகவுக்கு இருந்தது. இதனால், ‘பிளான் பி’யாக அதிமுக அதிருப்தி அணியை அணுகினார்கள். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிலிருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். இவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என பேசப்பட்டது.