நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதமே உள்ளதால் ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
கூட்டணிக்கு கூவி கூவி அழைத்த விஜய்
ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு நடிகர் விஜய் மீதே அமைந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? திரையில் ஜொலித்த விஜய் அரசியலிலும் ஜொலிப்பாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சிகள் தயவில்லாமல் தேர்தலைச் சந்திப்பது மிகவும் சவாலானது என்பதை உணர்ந்த விஜய், விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டிலே ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
மக்கள் மட்டும்தான் துணை:
தவெக-வுடன் கூட்டணி வைக்க விசிக, காங்கிரஸ் என பல கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்கு வர தயார் இல்லை என்றே தெரிகிறது. திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ் கட்சிகளும் வரத் தயார் இல்லை என்றே தெரியவந்துள்ளது. விஜய் அரசியல் களத்திற்கு வந்தால் அவருக்கு பக்கபலமாக இருப்பார் என்று கணிக்கப்பட்ட சீமான், விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், தவெக-வின் செயலி அறிமுக விழாவில் நேற்று பேசிய தவெக தலைவர் விஜய் மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு என்ற அண்ணாவின் கோட்பாட்டை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், மக்களுடன் மக்களாக இருக்கப்போகிறோம், நாம் இருக்கிறோம், நம்முடன் மக்கள் இருக்கிறார்கள், இதற்கு மேல் என்ன வேண்டும், நல்லதே நடக்கும் என்று பேசியுள்ளார். வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் எந்த கட்சியினரும் வராத காரணத்தால் விஜய் சற்று விரக்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியள்ளது.
துணைக்கு வரப்போவது யார்?
விஜய்யின் இந்த பேச்சு கூட்டணிக்கு எந்த கட்சியும் வர தயாராக இல்லை என்பதால், மக்களை நம்பியே இந்த தேர்தலில் களமிறங்க வேண்டி உள்ளது என்பதையே காட்டுகிறது. ஏனென்றால், கூட்டணியில் இருந்து பாஜக-வை அதிமுக கழட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு பிறகு அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே தெரிகிறது.
இதனால், திமுக மற்றும் அதிமுக என்ற மாபெரும் பலமிகுந்த கட்சிகளை எதிர்த்து தனியாக களமிறங்குவதை 1967 மற்றும் 77 தேர்தல்களுடன் ஒப்பிட்டு விஜய் பேசியதாகவும் கருதப்படுகிறது. கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்க்கு தற்போது வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடுத்த 10 மாதத்திற்குள் விஜய்யின் அரசியல் களத்தில் துணையாக ஏதேனும் கட்சிகள் வருமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.