தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையான ஆட்சியில் பங்கு என்பதற்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என கூறியுள்ளார்.
நெருங்கும் தேர்தல்- கூட்டணி பேச்சுவார்த்தை
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பாக இன்னும் ஆளுங்கட்சியில் பேச்சுவார்த்தை தொடங்கவே இல்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை தான். ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதி வேண்டும் என அடம்பிடித்தது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக, இன்னும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை. இந்த நிலையில் தான் வருகிற 22ஆம் தேதி முதல் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்தது.
ஊழல் கூட்டணிக்கு பெயர் டபுள் இன்ஜின் கூட்டணி
இந்த பரபரப்பான நிலையில், இன்று இந்தியா டுடேவின் கருத்தரங்கு நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,திமுக மக்களோடும் எப்போதும் இருக்கும் இயக்கம். உற்சாகமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். 5 ஆண்டுகளில் வரலாற்று காணாத வெற்றிப் பாதையில் சென்று கொண்டுள்ளது. வளர்ச்சி பயணம் வெற்றி பயணமாக அமையும் என தெரிவித்தார். தமிழகம் 11.19 பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. மத்திய அரசால் இந்த வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
டாப் டென் யுனிவர்சிட்டிகள் தமிழகத்தில் உள்ளது. புள்ளி விவரங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல்வேறு விருதுகள் தேடி வருகிறது எனவும் தெரிவித்தார். திமுக அரசு தொடர்ந்தால் தான் மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் கொடுத்தது ஜீரோ தான். தேர்தலில் அவர்களுக்கு ஜீரோ தான். ஊழல் கூட்டணிக்கு பெயர் டபுள் இன்ஜின் கூட்டணி. அசாம் முதலமைச்சர் துப்பாக்கியை காட்டுவது போல புகைப்படத்தை வெளியிடுகிறார். பாஜகவின் பாசிசம் தமிழகத்தில் எடுபடாது என கூறியவர், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக உள்ளேன். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது அதை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி தொடரும்
எதிர்கட்சிகள் எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக வெற்றி பெறும், 200 தொகுதியை தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். ராகுல் காந்தி அரசியலமைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார். நானும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக அவரை பார்ப்பதாக தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என காங்கிரஸ் கட்சிக்கே தெரியும். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லையென முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.