Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி செவிலியர் உயிரிழப்பு
திருச்சியில் கடந்த வாரம் செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு – கலைச்செல்வி தம்பதியினர் மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செவிலியர் சீதாலட்சுமி திடீரென உயரிழந்தார். மூக்கு அறுவை சிகிச்சைக்கு சென்றவர் திடீரென உயிரிழந்தது சீதாலட்சுமியின் பெற்றோரை மட்டுமில்லாமல் உடன் பணியாற்றிய செவிலியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.
மூக்கு அறுவை சிகிச்சை- செவிலியர் உயிரிழப்பு
இதனையடுத்து தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறி மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
உயிரிழப்பிற்கு காரணம் என்ன.?
குழுவில் இஎன்டி மருத்துவர் பாரதி மோகன் , மயக்கவியல் மருத்துவர் சண்முகசுந்தரம் , மற்றும் மருத்துவர் ஜெயபிரகாஷ் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அறுவை சிகிச்சையின்போது செவிலியர் உயிரிழந்ததற்கு டெக்சாம்மெதாசோன் என்ற தரமற்ற மருந்தே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே (Inj dexamethasone) குறிப்பிட்ட பேட்ச் மருந்து சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் குறிப்பிட்ட பேட்ச் மருந்துகள் நிறுத்தப்பட்டு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.