TN By-Election: தம்ழிநாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேதலில் ஆளுங்கட்சியான தவெகவை வீழ்த்த, ஒருங்கிணைந்து செயல்பட திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளனவாம்.
TN By-Election: தம்ழிநாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேதலில் ஆளுங்கட்சியான தவெகவை வீழ்த்த, விட்டுக்கொடுத்து செல்ல திமுக மற்றும் அதிமுக முடிவெடுத்துள்ளனவாம்.
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்:
தமிழ்நாடு
சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையிலும், இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. கூட்டணியிலிருந்து விலகல், எதிர்தரப்பிற்கு ஆதரவு, கூட்டணி ஆட்சி மற்றும் அமைச்சரவை என தமிழ்நாடு கடந்த சில தசாப்தங்களில் கண்டிராத பல அதிரடியான அரசியல் திருப்பங்களை கண்டு வருகிறது. அதில் ஒரு அங்கமாக தான், அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனிடையே, விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 5 தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றிற்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகள் இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காலியான 5 தொகுதிகள்:
திருச்சி கிழக்கை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா, மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமா ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவை சட்டமன்ற தொகுதிகள் காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்றைய முதலமைச்சரின் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் மூலம், இடைத்தேர்தலுக்கான பரப்புரையும் தொடங்கியுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
”நமக்குள்ள சண்டை வேண்டாம்”
இடைத்தேர்தலை ஒட்டி தங்களுக்குள் போட்டி வேண்டாம் என்பதே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் நிலைப்பாடாகவும் உள்ளது. தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அரசை அமைத்து இருப்பதாலேயே, தவெக சற்றே நிதானமாகவும் வலுவான எந்த அரசியல் நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் திணறுகிறது. அந்த நிலையில் தொடர வேண்டுமானால், சட்டமன்றத்தில் அந்த கட்சியின் பலம் மேலும் உயரக்கூடாது என்றே இருபெரும் கட்சிகளும் விரும்புகின்றனவாம். அதனை உறுதி செய்ய தங்களுக்குள் போட்டி ஏற்படுவதை தவிர்த்து, ஒரே எதிரியாக தவெகவை நிர்ணயித்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம். இருதரப்பு தலைமைகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனராம்.
”உனக்கு நாலு, எனக்கு ஒன்னு”
வெளியாகியுள்ள தகவல்களின்படி, திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இரண்டாம் இடம் பிடித்ததால், அங்கு போட்டியிட்டு தான் ஆக வேண்டும் என அறிவாலயம் தரப்பு விரும்புகிறதாம். அதேநேரம் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளில் திமுகவும், அம்பாசமுத்திரத்தில் காங்கிரசும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு இருந்தன. ஆனால், அந்த நான்கு தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வீழ்த்தி அதிமுக வெற்றி பெற்று இருந்தது. குறிப்பாக மதுராந்தகத்தில் மூன்றாவது இடத்திற்கே தள்ளப்பட்டது. எனவே அந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணித்து, வெளியிலிருந்து அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படலாம் என திமுக விரும்புகிறதாம்.
இருமுனை போட்டி போதுமே..!
பொதுவாகவே இடைத்தேர்தல்களில் பொதுமக்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே வாக்களிப்பர். அப்படி இருக்கையில், மும்முனை போட்டியாக களத்தை மாற்றி ஆளுங்கட்சியின் வெற்றியை எளிதாக்குவதை காட்டிலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வலிமையை அதிகரிப்பதற்கான முடிவை எடுக்கலாம் என திராவிட கட்சி பரிசீலிக்கின்றனவாம். அதன்படி, திருச்சி கிழக்கில் மட்டும் திமுக போட்டியிடும் என்றும், மற்ற நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபாணியில் பொதுத்தேர்தலில் அதிமுக வென்ற தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை களமிறக்கி, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க வாய்ப்புள்தாம்.
சட்டப்பேரவை – அரசியல் கட்சிகளின் பலம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது தவெகவிற்கு 107 உறுப்பினர்கள் போக, ஆதரவு கட்சிகள் மூலம் 14 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், அக்கட்சியின் பலம் 112 ஆக உயரும். அதன் பிறகு அமைச்சரவையில் இடம்பெறாத இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு என்பது அவசியமற்றதாகி விடும். அதேநேரம் எதிர்க்கட்சிகள் தரப்பில் திமுகவில் 59 எம்.எல்.ஏக்களும், அதிமுகவில் 43 எம்.எல்.ஏக்களும், பாமகவில் 4 எம்.எல்.ஏக்களும், பாஜக மற்றும் தேமுதிக சார்பில் தலா ஒரு எம்.எல்.ஏவும் இடம்பெற்றுள்ளன.